கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு மாட்டிக்கொண்ட திருடன்!
![](https://thambattam.com/storage/2020/09/Satna-1435740902_835x547.jpg)
ஆந்திராவில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டை விட்டு திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோக்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றிரவு வழக்கம்போல் ஸ்ரீநிவாஸ் ரெட்டி வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாருக்கும் தெரியாமல், அவரது வீட்டுக்குள் புகுந்த திருடன், கட்டிலுக்கு கீழ் மறைந்து கொண்டான்.
ஸ்ரீநிவாஸ் தூங்கிய பின், வீட்டில் இருக்கும் பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி செல்லலாம் என்று திருடன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், நள்ளிரவு வரை சீனிவாஸ் ரெட்டி, வசூலான பணத்தை எண்ணி கொண்டிருந்ததால், கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த திருடன் அசதியில் தூங்கி விட்டான். பின்னர் குறட்டை விடவும் தொடங்கியுள்ளான்.
வீட்டில் திடீரென சத்தம் கேட்டதை கவனித்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி, வீட்டுக்குள் திருடன் புகுந்து விட்டதை உறுதி செய்தார். பின்னர் படுக்கை அறையிலிருந்து உடனடியாக வெளியேறி கதவை பூட்டினார். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு அவர் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்டிலுக்கு அடியில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த திருடனை கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அவன் பெயர் சூரி பாபு என்பது தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டை விட்டு மாட்டிக்கொண்ட திருடனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.