‘சுண்டைக்காய்’ பிரச்சனைக்காக வாழ்க்கையை முடித்துக் கொண்ட இளைஞர்!

கள்ளக்குறிச்சியில் சுண்டக்காய் பறித்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் சிறுவர் பூங்காவின் பின்பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷின் மகள் பெயர் சினேகா, தனது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகே இருந்த செடியில் காய்த்துள்ள சுண்டைக்காயை பறித்துள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கொளஞ்சி என்பவர் சினேகாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் சினேகாவையும் அவரது தம்பியையும் அடித்துள்ளார். விஷயத்தை கேள்விப்பட்டு வந்த சினேகாவின் தந்தை சுரேஷ் மற்றம் தாய் சுமதியும், கொளஞ்சியிடம் ஏன் எனது பிள்ளைகளை அடித்தீர்கள் என கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கொளஞ்சியும், அவரது மகனும் சுரேஷின் குடும்பத்தினரை கையில் உள்ள இரும்பு கம்பியால் கடுமையாக அடித்துள்ளனர்.
இதில் பலத்த காயமுற்ற சுரேஷின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சுரேஷ் நேற்று மாலை வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்ததால் மது அருந்தி விட்டு வீட்டிற்குச் சென்றவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது வீட்டிற்கு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.