“ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு அரசியல் நாடகம் தான்!” காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!!
“மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா நாடகம் தான். இல்லையென்றால், ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகவில்லை?” என்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்து, சிரோன்மணி அகாலிதளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
Harsimrat Kaur’s decision to quit Union Cabinet is another in the long chain of theatrics being enacted by @Akali_Dal_ which has still not quit ruling coalition. It's motivated not by any concern for farmers but to save their own dwindling political fortunes. Too little too late.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 17, 2020
இது குறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், “மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருப்பது நாடகம். இது சிரோன்மணி அகாலிதளம் கட்சி நீண்டகாலமாக நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதிதான். நாடகம் இல்லையென்றால், ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகவில்லை. விவசாயிகளின் நலனுக்காக இந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை. அரசியல் நலன்களுக்காகத்தான் ராஜினாமா செய்துள்ளார்கள். இது மிகவும் தாமதமான முடிவு” என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்ஹர், சிரோமணி அகாலிதள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்துக் கூறியதாவது: “அது ஒரு நிர்பந்தம், ராஜினாமா என்பது விவசாயிகளின் மீதுள்ள கருணையினாலோ, பற்றினாலோ அல்ல, நிர்பந்தத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 4 மாதங்களாக விவசாயிகளை முட்டாள்களாக்கி வந்தனர், ஆனால் கடைசியில் இவர்களே எள்ளி நகையாடுவதற்குரிய நபர்களாகினர்.
மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் இந்த நடைமுறையில் பாஜக கூட்டணியில் அகாலிதளம் தன் மரியாதையையும் இழந்தது. ஏனெனில் விவசாயிகளின் ஆதரவு இவர்களுக்கு இல்லவே இல்லை. விவசாயிகள் ஆதரவில்லாமல் இவர்கள் பயனற்றவர்கள் என்று மோடி எண்ணினார். சரி இவர்களை அமுக்குவோம் என்று முடித்து விட்டார். விவசாயிகள் ஆதரவில்லாமல் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் ஒரு சுமைதான் என்று அவர் நினைத்திருப்பார். ஆனால் பாஜகவும் விவசாயிகள் பற்றி கவலைப்படும் கட்சியல்ல. இவ்வாறு சுனில் ஜக்ஹர் கூறினார்.