மாநிலங்களவையில் நிறைவேறிய வேளாண் மசோதாக்கள்.! கடும் கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடா்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா 2020, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். மூன்று மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. இதனிடையே கடும் அமளியால் அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. இதில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.