வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்!!
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானாவில் விவசாயிகள் முக்கிய சாலையை வழிமறித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் 2 மசோதாக்கள் நிறைவேறியுள்ளது.
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஹரியானாவில் முக்கிய சாலையான சிர்ஸாவில் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், “விவசாய பொருட்களை குறைந்தபட்ச விலையை விட குறைவாக கொள்முதல் செய்வோரை தண்டிக்க இந்த அரசு சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் நம் விவசாய பொருட்கள் விற்பனைக்கு ஒரு உத்தரவாதம் கிடைக்கும்” என்றனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்திய சிர்ஸா சாலை முக்கிய சாலை என்பதால் இங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.