ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட, 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், வேளாண் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், இந்த மசோதாவை பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை மத்திய அரசு ஏற்காமல் குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றியது.
இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்து, கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிணமுல் உறுப்பினர் டெரக் ஓ பிரெயின், சபை தலைவர் இருக்கையை நோக்கி பாய்ந்தார். மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அங்கிருந்த சில புத்தகங்கள், குறிப்பேடுகளை கிழித்தெறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ராஜ்யசபா, ‘டிவி’ நேரடி ஒளிபரப்பின், ஆடியோ நிறுத்தப்பட்டது., எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, சபை அலுவல்கள் 15 நிமிடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னரும் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக டெப்ரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன், எலமாரன் கரீம் ஆகியோரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். மேலும், துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நிராகரிப்பதாக அறிவித்தார்.