வேளாண் மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!!
வேளாண் மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் பஞ்சாபில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மூன்று நாள்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். பாரதிய கிசான் சங்கம், கிசான் மஸ்தூர் சங்கராஷ் உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், சிறப்பு மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே மட்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை, சரக்கு போக்குவரத்து பாதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஹரியாணா மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியினரும், விவசாயிகளும் சாலைகளில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.