வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் செய்து போராட்டம்!!!
விவசாயிகளைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை ‘கருப்பு ஞாயிறு’ என விவசாயிகள் சங்கங்கள் அழைக்கின்றன.
இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். இந்த மிக மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் மற்றும் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டத்தை நடத்த முடிவு செய்து அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வேளாண் மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழையூர் கடைத்தெரு பகுதியில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஏ. செல்லையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் சிஐடியு, டி.ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ, பெண்கள் மாதர் சங்கம், விவசாய சங்கம் ஆகிய அமைப்புகள் சாலையில் ஊர்வலமாக சென்று பின் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் முற்றுகையிட்டனர். கையில் மண்டை ஓடுகள், தூக்கு கயிறு ஆகியவற்றுடன் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்- திருச்சி சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டியில் வேளாண் சட்ட நகல்களை விவசாய சங்கத்தினர் எரித்தனர். இதனையடுத்து சட்ட நகலை எரித்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ, ஐஎன்டியுசி உட்பட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.