66-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்!!
![](https://thambattam.com/storage/2020/09/metturdam.jpg)
மேட்டூர் அணை வரலாற்றில், 66-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டேன்லி அணையின் உயரம் 120 அடி ஆகும். இதில், கடந்த 21-ம் தேதியன்று நீர்மட்டம் 89.77 அடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஏற்கெனவே நிரம்பியிருந்த கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வந்த வெள்ள நீர் முழுவதும், காவிரியில் உபரியாகத் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக, மேட்டூர் அணைக்குக் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தது. இந்த நிலையில், இன்று நண்பகலில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 66-வது முறையாகவும், நடப்பாண்டில் முதல் முறையாகவும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதனால், சேலம், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/09/Mettur-dam-300x138.jpg)
கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நிரம்பி, அதன் நீர்மட்டம் 120.21 அடியாக இருந்தது. மேலும், அணையில் இருந்து உபரியாக விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இதனிடையே, நீர்மட்டம் 100 அடியைக் கடந்து உயர்ந்து வருவதால், அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகினை தொட்டபடி, நீர் மட்டம் உள்ளது. இந்த இடத்தில், காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் மேட்டூர் அணை நிர்வாகம் சார்பில் பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது.