விவசாயிகளுக்காக அட்டகாசமான திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி!!
ஆந்திராவில் விவசாயிகளுக்கு ‘தண்ணீர் கனவு’ திட்டத்தின் கீழ் இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திராவில் தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என்று தேர்தலின் போது முதல்வர் ஜெகன்மோகன் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி ஆந்திர மாநில முதல்வர் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தண்ணீர் கனவு (ஜல கலா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.
காணொலி காட்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டம் தொடர்பாக பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”விவசாயிகளுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி ஒய்.எஸ்.ஆர் (ஜல கலா) தண்ணீர் கனவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2 லட்சம் ஆழ்துளை கிணறுகளை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
YSR Jalakala Free Borewell Vehicles flag off by MLAs and District Collector G.Veerapandian Today near State Guest House Main Road in Kurnool pic.twitter.com/2CTLgkgFCi
— DIPRO_KURNOOL (@ddipr_knl) September 28, 2020
இந்த திட்டம் ஆந்திராவின் 144 கிராமப்புற தொகுதிகள், 19 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும். அத்துடன் கிணற்றில் நீர் இறைக்க தேவையான மோட்டாரும் இலவசமாக பொருத்தி தரப்படும். இதற்காக கூடுதலாக ரூ.1600 கோடி அரசு செலவு செய்யும்” என்றார். ஆந்திர அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.