வழக்கில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
தொஷாகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோஷாகானா ஊழல் (நாட்டின் பரிசு வைப்புத்தொகை) வழக்கில் ஆஜராகத் தவறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோரை குற்றவாளி என செப்டம்பர் 9 ம் தேதி ஊழல் தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது.
தோஷாகானாவிலிருந்து 15 சதவீத விலையை செலுத்திய பின்னர், நவாஸ் ஷெரீஃப் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு டிராக்டர்கள் மற்றும் கார்களும் நீதிமன்றம் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்ட சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தோஷாகானா ஊழல் வழக்கு கிலானி, சர்தாரி மற்றும் ஷெரீப் ஆகியோரின் நலனுக்காக வெளிநாடுகளால் பரிசளிக்கப்பட்ட வாகனங்களை வாங்குவதற்காக விதிகளை தளர்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வாகனங்களின் விலையில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே செலுத்தி கருவூலத்தில் இருந்து சொகுசு கார்களைப் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிபதி அஸ்கர் அலி, நவாஸ் ஷெரீப்பின் தேசிய மற்றும் சர்வதேச வங்கிக் கணக்குகளை முடக்கி, லாகூரில் உள்ள அவரது 206 ஏக்கர் விவசாய நிலத்தையும், ஷேகுபுராவில் உள்ள 12.75 ஏக்கர் நிலத்தையும், பஞ்சாப் மாகாணம் முர்ரியில் உள்ள அவரது வீட்டையும் பறிமுதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சவுத்ரி சர்க்கரை ஆலைகள் மற்றும் அல் அஜீசியா வழக்கில் ஜாமீன் பெற்று மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர் இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.