“நான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டேன்!” உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சௌந்தர்யா!!

தன்னை யாரும் கடத்தவில்லை. தான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டதாக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன் காதலித்து வந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு அவரது வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் பிரபு, 19 வயது கூட நிரம்பாத தன் மகள் சௌந்தர்யாவை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது தந்தை சாமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் சௌந்தர்யாவை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சௌந்தர்யா மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி அவரை எம்.எல்.ஏ பிரபுவுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் தந்தை சுவாமிநாதன் பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனது மகளை மூளைச் சலவை செய்துள்ளனர். பிரபு எம்.எல்.ஏ. கட்டுப்பாட்டில்தான் சவுந்தர்யா இருக்கிறார். அரைமணி நேரம் பேசியும் என் முகத்தை மகள் பார்க்கவில்லை. முறையாக வந்து பெண் கேட்டதாக கூறுவது தவறு. வழக்கு தொடுக்க வேண்டாம் என பணம் கொடுத்தும் மிரட்டினார்.15 வயதிலிருந்து காதலித்ததாக சொல்கிறார். திருமண வயதை எட்டும் வரை காத்திருந்து திருமணம் செய்துள்ளார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.