பொங்கி வரும் வெள்ளத்தால் கர்நாடகாவில் 35,000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..!
கர்நாடகத்தில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி கூறுகையில், “மகாராஷ்டிரத்தில் பெய்த மழையால் அங்குள்ள பீமா நதி நிரம்பியதால், அக்டோபர் 14 முதல் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணா துணை நதியான இந்த நதியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களான கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 97 கிராமங்கங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதையடுத்து அங்குள்ள மக்கள் 36,290 பேரை கிராமங்களில் இருந்து வெளியேற்றி உள்ளோம். இந்நிலையில், 174 நிவாரண முகாம்களில் 28,007 பேர் தங்கியுள்ளனர். இராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.