“குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தாலும் எனக்கு கவலையில்லை” கர்ஜிக்கும் பஞ்சாப் முதல்வர்!
“விவசாய சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியதால் ஆட்சிப் பறிபோனாலும் எனக்கு கவலையில்லை” என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பத்திரிகையாளர்களிடம் விவசாய சட்டத்திற்கு எதிரான தீர்மானம் குறித்து கூறுகையில்,” பஞ்சாபின் குரல் ஆளுநரை சென்றடைந்துள்ளது. அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். மேலும், பஞ்சாபில் நடக்கும் போராட்டங்களின் விளைவாக குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தாலும் எனக்கு கவலையில்லை.
நீங்கள் எனது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறீர்களா? செய்யுங்கள்.. நான் ஒரு கெடுதலும் மக்களுக்கு கொடுக்கவில்லை. நான் செய்வது அனைத்தும் மாநில மற்றும் நாட்டின் விவசாயிகள் நலனுக்காக” என்று முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
இதற்குமுன், செவ்வாய்க்கிழமை(நேற்று) பஞ்சாப் சட்டப் பேரைவையில் விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி, அந்த தீர்மானத்தின் நகலை சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
மேலும், விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் போது சட்டப் பேரவையில் பேசிய முதல்வர், “முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது ஆட்சிக் கலைந்துவிடும் என்றோ நான் பயப்படவில்லை, விவசாயிகளின் நலனுக்காக அதையும் எதிர் கொள்ள தயாராக உள்ளேன்.
பஞ்சாபில் 1980 மற்றும் 90 களில் இருந்தது போல் போராட்டம் வலுபெற்று உள்ளது. விவசாயிகளுடன் இளைஞர்களும் கைக்கோர்த்தால் நிலைமை மோசமடையும்” என தெரிவித்தார்.