மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், 3 மணி நேரத்தில் ஈரோடு பெண்ணுக்கு மாற்றப்பட்டது!!
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், ஆம்புலன்ஸ் மூலம் 3 மணி நேரத்தில் ஈரோடு கொண்டு வரப்பட்டு, சிறுநீரகம் செயல் இழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் கீழ பகுதி சங்கிபூசாரி ஊரைச் சேர்ந்த ரேணுகோபால் மனைவி ஜெகதாமணி (45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகம் செயல் இழந்து, கரூர் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெற ஜெகதாமணி பதிவு செய்து, 2 ஆண்டுகளாக காத்திருந்தார்.
இந்நிலையில், மதுரை வேலம்மாள் மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த கருப்பையா என்பவரது சிறுநீரகம், ஜெகதாமணிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவானது. ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னிகேர் தலைமை மருத்துவமனையில் ஜெகதாமணி அனுமதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்தினர்.
இதையடுத்து மதுரையில் இருந்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் ஈரோடு எடுத்து வரப்பட்டது. காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டதால், மதியம் 1.20 மணியளவில் ஈரோடு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் வந்தடைந்தது. மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஜெகதாமணிக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இதுதொடர்பாக, அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் சரவணன் கூறியதாவது: “ஜெகதாமணிக்கு கிரானிக் கிட் என்ற நோய் பாதிப்பு காரணமாக சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. கடந்த 2 வருடமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மதுரையில் இருந்து தானம் பெறப்பட்ட சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என்றார்.