விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பெண்கள் பலி!!
![](https://thambattam.com/storage/2020/10/fire-accident-780x470.jpg)
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
எரிச்சநத்தம் பகுதியில் ராஜலட்சுமி ஃபையர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள்.
ஆனால் வெடிவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 5 பெண்கள் உடல்கருகி உயிரிழந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.