டிரெண்டிங்தலைநகரம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!!

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது  அதிருப்தி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிராதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானக் கோப்பின் நிலை என்ன? என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று விசாரணையின்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ”உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் எந்த முடிவும் இல்லை. எனவேதான் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறோம். அதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” எனத் தெரிவித்தார்

அப்போது நீதிபதிகள் தரப்பில், ”பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். அவர் உத்தரவிட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிருப்தி அளிக்கிறது.

ஏன் ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார்? ஏன் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்? ஆளுநருக்குத் தமிழக அரசுத் தரப்பு எடுத்துரைக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், எந்தச் சட்டம், எந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து கூறுங்கள்” எனத் தெரிவித்தனர்.

இதற்கு தமிழக அரசுத் தரப்பில், ”இந்த விவகாரம் பரந்துபட்ட சதி சம்பந்தப்பட்டது ஆகும். மேலும், ஆளுநருக்கு சிபிஐ அறிக்கை கிடைக்கவில்லை. அதனால் அவர் முடிவெடுக்காமல் காத்திருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

”பரந்துபட்ட சதி என்பது இந்த வழக்கில் தொடர்புடைய பிறரின் விவகாரம் தொடர்புடையது ஆகும். வழக்கின் கோப்புகளைப் பாருங்கள்” எனத் தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வாதிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், ”நிலோபர் நிஷா வழக்கில் நீதிமன்றம் தனது பிரத்யேக அதிகாரத்தை (ஆர்ட்டிகிள் 142 ) பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தது. எனவே, அதையே இந்த வழக்கிலும் நடைமுறைப்படுத்தலாம். மேலும், இதுபோன்ற பிற வழக்குகளின் தீர்ப்பு, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்பது தொடர்பாக விரிவாக நாங்கள் வாதிடுகிறோம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நவ. 23-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x