“யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, அதுபோல இதையும் செய்யுமா?” கனிமொழி எம்.பி. ‘நறுக்’ கேள்வி!!
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன.
இதனிடையே பாஜகவினர் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் கொடுத்து வரும் நிலையில் இன்னும் உறுதியான முடிவு எதுவும் போலீஸ் தரப்பில் எடுக்கப்படவில்லை. பாஜகவின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி வேல் யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுத்தாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சட்டம் -ஒழுங்கு பிரச்சனை என கூறி பாஜகவின் வேல் யாத்திரிகைக்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த செந்தில் குமார், பாலமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள் உள்ளிட்டோர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகுவதுடன் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும், யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? #DMK #திமுக
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 4, 2020
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜகவின் வேல் யாத்திரை குறித்து ட்வீட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். “தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.