“மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு!!
டில்லியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” என, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமை யிலான காங்கிரஸ் அரசு வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், அமரீந்தர் சிங் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாப் காங்., – எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுடன், சிரோமணி அகாலி தளம் உட்பட எதிர்க்கட்சி எம்.எல். ஏ.,க்களும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் அமரீந்தர் சிங் பேசுகையில், “மத்திய அரசு பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. வேளாண் திருத்த சட்டங்கள், முழுமையாக விவசாயிகளுக்கு எதிரானது. டில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை. இப்போராட்டத்தில், ஆம் ஆத்மி பங்கேற்காமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு, அவர் பேசினார்.