திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது பரிதாபமாக உயிரிழந்த இளம் ஜோடி!!
![](https://thambattam.com/storage/2020/11/accident-2.jpg)
கர்நாடக மாநிலத்தில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகளும், மணமகனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு அருகே உள்ள கியாத்மாரனஹளியை சேர்ந்த 28 வயது சந்ருவுக்கும், 20 வயது சசிகலாவுக்கும் வரும் 22ம் தேதி பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெறவிருந்தது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னதான ஃபோட்டோ சூட்காக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தலக்காடு செல்ல அந்த காதல் ஜோடி முடிவு செய்தது.
அதன்படி பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடக்க முடிவு செய்துள்ளனர். உறவினர்கள் மற்றொரு பரிசலிலும், இவர்கள் ஒரு பரிசலிலுமாக காவிரி ஆற்றை கடந்துள்ளனர். ஆனால் கரையை எட்ட சுமார் 15 மீட்டர் தூரமே இருந்த போது இளம்ஜோடியின் கனவில் விதி விளையாடிவிட்டது.
அவர்கள் ஃபோட்டோ சூட்டுக்காக போஸ் கொடுத்த போது, பரிசல் எதிர்பாராத விதமாக திடீரென சாய்ந்து நீரில் கவிழ்ந்தது. தொடர்ந்து, நீச்சல் தெரியாததால் இருவரும் சில வினாடிகள் நீரில் தத்தளித்த நிலையில், நீரில் மூழ்கினர். இதனை கண்டு மற்றொரு பரிசலில் அவர்களை படம் பிடித்தவாறு சென்ற உறவினர்கள் பதறினாலும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இந்த பரிசலோட்டி நீந்தி கரையை சேர்ந்துவிட்டார்.
திருமணத்திற்கு 2 வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஃபோட்டோ சூட் காரணமாக இளம் ஜோடிகள் உயிரை இழந்தது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.