“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கும் மத்திய அரசு!” எச்சரிக்கும் வைகோ!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்,  மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்றுவிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை, துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம்.

ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கூடக் கற்றுத் தரலாம். பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டு உள்ளது. 2013 – 14 ஆம் கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் தமிழக கேந்திரிய பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்றுத்தர போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம், கடந்த ஐந்து ஆண்டுகளாக துணை ஆணையருக்குக் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படுவர் என்றும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இருக்குமானால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கல்வி விதி 112 ஆம் பிரிவில் மாற்றங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால் பாஜக அரசு 2014 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல், மத்திய அரசுப் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து வருகின்றது.

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில், தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். குறிப்பாக, தமிழ் மொழியின் மீது பாஜக அரசு காட்டும் வன்மம், தமிழக மக்களுக்குப் புரியாதது அல்ல. இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்யவும், மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x