“5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது” உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
“ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட முடியாது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4) -ஐ பயன்படுத்தி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின்பும் கிரிமினல் குற்றவாளிகள் பலர் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வலம் வந்தனர்.
இந்தச் சட்டப் பிரிவு 8 (4) அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும் இந்தப் பிரிவு செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி லில்லி தாமஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார். அந்த வழக்கில், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும் என கடந்த 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, லாலு பிரசாத், ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா, செல்வகணபதி, பாலகிருஷ்ணரெட்டி என அடுத்தடுத்து பல அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோனது. இப்படி சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது.
இந்த நிலையில், தற்போதைய வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி ஓராண்டு ஆன நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளியில் வரவிருக்கிறார். வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், இந்த வழக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிமுக, சசிகலாவின் வருகைக்குப் பிறகு மாறுதல் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சசிகலா போட்டியிட வாய்ப்பிருக்குமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.