பீஹாரில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட இடம்பெறாத ஆளுங்கட்சி கூட்டணி!! நாடு தழுவிய இந்துத்துவாத்திற்கு முன்னோட்டம் பார்க்கிறதா பாஜக??

பிஹாரில் 16 சதவிகித முஸ்லிம்கள் இருந்தும் ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒரு எம்எல்ஏ கூட அதில் இடம்பெறாதது தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.
பிஹாரின் மக்கள் தொகையில் அதிகமாக முஸ்லிம்கள் 17 மற்றும் யாதவர் 14 சதவிகிதம் உள்ளனர். இதனால், அதன் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்வியை அவர்களே நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இவர்களில், முஸ்லிம்கள் வாக்களித்த அரசியல் கட்சிகளால் இந்தமுறை வெற்றி பெற முடியவில்லை. மாறாக, முஸ்லிம்களின் வாக்குகளை அதிகம் பெறாத அரசியல் கட்சிகளின் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) வென்று ஆட்சி அமைத்துள்ளது. இங்கு என்டிஏவிற்கு தலைமை வகித்த ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார், நேற்று ஏழாவது முறையாக முதல்வராகி உள்ளார்.
என்டிஏவில் பாஜக, ஜேடியு, பிஹாரின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர்(ஹெச்ஏஎம்) மற்றும் விகாஷீல் இன்ஸான் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. இவற்றில் ஜேடியுவில் மட்டுமே 11 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் ஒருவர் கூட இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. பாஜக உள்ளிட்ட மற்ற மூன்று கட்சிகள் ஒரு முஸ்லிமிற்கும் போட்டியிடும் வாய்ப்பளிக்கவில்லை.
இதனால், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாமல் பிஹாரில் ஆளும் அரசு அமைந்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமையில் இக்கூட்டணி போட்டியிட்டது. இக்கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்திருந்தன.
இக்கட்சிகளில் வென்றவர்களில் ஆர்ஜேடி 75 இல் 8, காங்கிரஸ் 19 இல் 4 மற்றும் இடதுசாரிகளில் 16 இல் ஒருவர் என முஸ்லிம்கள் வென்றுள்ளனர். மூன்றாவதாக அமைந்த இரண்டு கூட்டணிகளில் 6 முஸ்லிம்களுக்கு எம்எல்ஏவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒருவர் முஸ்லிமாக உள்ளார். இதன் தோழமை கட்சியான ஹைதராபாத் எம்.பி அசாசுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் 5 முஸ்லிம்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவர்களில் அதிக வேட்பாளர்கள் இடம்பெற்ற மெகா கூட்டணியின் தோல்விக்கும் முஸ்லிம்களே காரணமாகி விட்டனர். இதன் காரணமாக பிஹாரில் 24 என்றிருந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை வெறும் 19 ஆக குறைந்துள்ளது. இதன் கூட்டணியான காங்கிரஸின் வாக்குகளையும் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 8 வேட்பாளர்கள் பிரித்துள்ளனர். இதனால், 15 தொகுதிகள் வித்தியாசத்தில் மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. ஒவைஸியால் முஸ்லிம் வாக்குகள் பிரியாமல் இருந்திருந்தால், மெகா கூட்டணிக்கு சுமார் 25 தொகுதிகள் கூடுதலாக கிட்டி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதுபோன்ற நிலை முஸ்லிம்களுக்கு முதன்முறையாக உ.பி.யில் உருவானது.
இம்மாநிலத்தில் கடந்த 2017 இல் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவும் இல்லை. இதன் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் சார்பில் ஒரு முஸ்லிமுக்கும் போட்டியிடும் வாய்ப்பை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.