சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியரை, 4 ஆண்டுகளுக்கு பிறகு வாகா எல்லையில் ஒப்படைத்த பாகிஸ்தான் அதிகாரிகள்!!
சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக லாகூரில் கைது செய்யப்பட்ட இந்தியர், வாகா எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவைச் சேர்ந்த குந்தன் லால் மகன் பன்வாசி லால், எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமல் சம்ஜெய்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாகூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
முதலில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது பெயர் முகமது அஸ்லாம் என்றும், தான் ஒரு பாகிஸ்தானியர் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார். அவரிடம் ரூ. 500 மட்டுமே இருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போதுதான், அவரது உண்மையான பெயர் பன்வாசி லால் என்பதும், அவர் மனநலம் சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்தது.
பயண ஆவணங்கள் இல்லாமல் லாகூர் ரயில் நிலையத்தை அவர் வந்தடைந்தது எப்படி என்பது குறித்து இந்திய அதிகாரிகளிடமும் விசாரிக்கப்பட்டது. பின்னர், சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டிய குற்றத்துக்காக லாகூர் மத்திய சிறையில் அவர் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், புதன்கிழமை விடுதலை செய்யப்பட்ட பன்வாசி லாலை, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் காவல் துறையினர் வாகாவில் உள்ள பிஎஸ்எஃப் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.