விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையில் சிக்கி தவித்த நெல்லை மக்கள்!
நெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 10 அடிக்கு மேல் உயர்ந்தது. இந்த இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று இரவு நேரத்தில் மழை அதிகம் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மழையளவு பாளையங்கோட்டை பகுதிகளில் பதிவாகியுள்ளது.
பாளையங்கோட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட MKP நகரில் 500க்கும் மேற்பட்ட விடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் (தூத்துக்குடி) 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குன்னூரில் 9 செ.மீ. மழையும், கூடலூர் ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழையும், பாளையம்கோட்டை, பிளவாக்கில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நேற்றிரவு 72 மி.மீ. மழை அளவு பதிவான காரணத்தால் இங்குள்ள கால்வாய்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டிலுள்ள உபகரணங்களால் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.