“சசிகலா விடுதலையில் எந்த வித சிறப்பு சலுகையும் கிடையாது” கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் தகவல்!!
![](https://thambattam.com/storage/2020/09/sasikala-convicted-780x470.jpg)
“சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது” என கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைச்சாலையில் உள்ள சசிகலா தான் செலுத்த வேண்டிய ரூ.10 கோடி அபராத தொகையை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டியன் மூலமாக 2 தினங்களுக்கு முன்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
அதன் பிறகு சசிகலா அவர்களுடைய வழக்கறிஞர் மத்திய சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளிடத்தில் சசிகலா அவர்கள் விடுதலையாக 60 முதல் 70 நாட்கள் உள்ள நிலையில் அவர்களை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், “சசிககலா அவர்கள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு சலுகைகள் ஏதும் வழங்கமுடியாது” என வாய் வழியாக சிறைத்துறை அதிகாரிகள் ராஜா செந்தூரப்பாண்டியன் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “சட்டவிதிகளின் படியே சசிகலா விடுதலை செய்யப்படுவார். அவர்களுக்கென்று சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதற்கு வாய்ப்பில்லை என தெரியவந்திருக்கிறது.