அதிகரித்து வரும் கொரோனாவால், மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!!
நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்பதால் 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் குஜராத் மற்றும் தில்லி போன்ற இடங்களில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், குஜராத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நவம்பர் மாதத்தில், தில்லியில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை மற்றும் கொரோனாவால் பலியானோரின் உடலை மரியாதையான முறையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.