“பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கும்போது, தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க முடியவில்லை ஏன்?” உயர்நீதிமன்றம் கேள்வி!!
![](https://thambattam.com/storage/2020/09/Madurai-HighCourt-780x448.jpeg)
“பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம்.. ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா” என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்திலும் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில், ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையில் மாநில மொழியான தமிழ் மொழியில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
இதனால், மாநில மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க கோரி வக்கீல் அழகுமணி தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான முதற்கட்ட விசாரணையின் போது, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மாநில மொழிகளில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் என்ன நிலை உள்ளது என்பது குறித்தும், மத்திய அரசு தரப்பில் நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம்.. ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா? தாய் மொழியை ஊக்கப்படுத்தவேண்டும் என்கிறார் பிரதமர், ஆனால் இந்தி, ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர். வரும் காலங்களில் தமிழ் தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாவில் இடம் கிடைக்காது போல.
தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். சிதையாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது. வழக்கு தொடர்பாக நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.