ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் டிசம்பர் 20ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!!

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு சாத்தியமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை வெளியிட்டார். இதன்மூலம் வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் பணியாளர்களை அவர்களது இல்லங்களில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 18,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 9 லட்சத்து 61 ஆயிரத்து 320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.