விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரை நிறுத்திய இளம் விவசாயி மீது கொலைவழக்கு பதிவு!!
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த காவல்துறையின் தண்ணீர் வாகனத்தின் மீது லாவகமாக ஏறி, அதனை நிறுத்திய இளம் விவசாயி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளாலும், சமூக ஊடகவியலாளர்களாலும் நாயகனாகக் கொண்டாடப்படுபவர் 26 வயதாகும் விவசாயி நவ்தீப் சிங். கடந்த 25ம் தேதி தில்லி நோக்கி வந்து கொண்டிருந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, காவல்துறையின் தடுப்புகளை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டு, தனது டிராக்டரில் சென்று, தண்ணீர் டேங்கர் மீது ஏறி, மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்த அந்த இயந்திரத்தை நிறுத்தினார். இந்த சம்பவம் வீடியோவாக, புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
https://twitter.com/redcachenet/status/1332611576709271552?s=20
இதையடுத்து, நவ்தீப் மற்றும் பாரதிய விவசாய மாநில சங்கத் தலைவர் குர்நாம் சிங் மீதும் ஹரியாணா காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினரின் தடுப்புகளை இடித்துக் தள்ளிக் கொண்டு, காவலர் மீது டிராக்டரை விட்டு மோதச் செய்வது போல வந்ததால் நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, விவசாயியும், சமூக ஆர்வலருமான தனது தந்தை ஜெய் சிங்குடன் இணைந்து நவ்தீப் சிங் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.