கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: தனியாா் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை… தொடரும் அவலங்கள் ??

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த ஒரு தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு கரோனா சிகிச்சைக்கான அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தனியாா் மருத்துவமனை மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, பல தனியாா் மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கூடுதலாக ரூ.12.50 லட்சம் வசூலித்த சென்னை தனியாா் மருத்துவமனை ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணங்களை நிா்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதைப் பின்பற்றாமல் செயல்பட்ட கீழ்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நோயாளி ஒருவருக்கு 18 நாள்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12.50 லட்சம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்பாசாமி மருத்துவமனைக்கு கரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.