தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த காவலர் கைது..

தேனி, வெங்கலாகோயில் தெருவில் சீனியப்பன் மகன் கணேசன்(50) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,540 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடந்த ஆக.31-ம் தேதி தனிப் பிரிவு காவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தேனி காவல் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருள்களை கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த கணேசன், இதற்கு உடந்தையாக இருந்த தேனி, இடமால் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன்(35), சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜகுரு(38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ராஜகுரு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகையிலை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தேனியைச் சேர்ந்த ஆயதப் படை, மோப்பநாய் பராமரிப்பு பிரிவு தலைமைக் காவலர் பிரசன்னா(35) என்பவரை தேனி காவல் நிலைய காவலர்கள் கைது செய்துள்ளனர். தேனியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் நவரத்தினவேல் என்பவரை தேடி வருகின்றனர்.