மொபைல் போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாயுடன், இரு மகன்களும் பலி!!
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விட்டு பிரிந்து, தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழலில், இன்று அதிகாலை முத்துலட்சுமியின், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது முத்துலட்சுமி முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
அவரது 3 வயது மகனான ரஞ்சித்தும், 2 வயது மகனான தட்சித்தும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
முதற் கட்ட விசாரணையில் முத்துலட்சுமி இரவில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதேசமயம், கணவரை பிரிந்து வாழும் முத்துலட்சுமி, தனது பெற்றோரை ஊருக்கு அனுப்பி இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.