பாகுபாடின்றி செயல்படுகிறோம்: ‘பேஸ்புக்’ திடீர் விளக்கம்

எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக, ‘பேஸ்புக்’ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில், ‘பேஸ்புக், வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்களை பா.ஜ.க., – ஆர்.எஸ்.எஸ்., ஆகிய அமைப்புகள் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதன் மூலம் மக்களிடையே வெறுப்புணர்வு தூண்டுப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக அமெரிக்க நாளிதழில் வெளிவந்த செய்தியையும் மேற்கொள்காட்டினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேரில் விளக்கமளிக்கும்படி, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழு, ‘பேஸ்புக் இந்தியா’ நிறுவனத்திற்கு, ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. இதன்படி, செப்டம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகி, ‘பேஸ்புக் இந்தியா’ நிறுவன அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர்.
இந்நிலையில், ‘பேஸ்புக் நிறுவனம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக இயங்கி வருகிறோம். ‘பேஸ்புக்’கில் யார் வேண்டுமானாலும், தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். எந்த வகையிலும் பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்க மாட்டோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.