“‘தற்சார்பு இந்தியா’ எனும் விளம்பரம் வேண்டாம்; செயல்படுங்கள்” பிரதமருக்கு அறைகூவல் விட்ட சிவசேனா எம்.பி!!
சில தினங்களுக்கு முன்பு ரஷியா கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 15 இந்தியா கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடித்து விடுவதாக சொன்ன பிரதமர் மோடியிடம் தற்சார்பு இந்தியா பற்றி உபதேசம் மட்டும் செய்யாதீர்கள் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் வாரம்தோறும்எழுதி வரும் கட்டுரையில் கூறியுள்ளதாவது: “சூப்பர் பவர் என்பதற்கு ரஷ்யா நாடுதான் உதாரணம். ஆனால் ரஷ்யாவை யாரும் நம்முடைய அரசியல் தலைவர்கள் பின்பற்றமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உள்நாட்டில் கண்டுபிடித்துள்ள ரஷ்யா அதை உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலகிலேயே முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்ததாக அறிவித்தார். இந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான நோய் எதிர்ப்புச்சக்தியை தருவதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், உலகிற்கு தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என அறிவிக்கும் வகையில் தனது மகளின் உடலில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தினார் புதின். தற்சார்பு பற்றி உலகிற்கே முதன்முதலாக ரஷ்யாதான் பாடம் எடுத்துள்ளது. ஆனால், நாம் தற்சார்பு பற்றி உபதேசம் மட்டுமே செய்து வருகிறோம். இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.