என்ன ஆனாலும் சரி… பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

கொரோனா பரவலை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 28ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கவில்லை எனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும். எனவே, பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது பீகாரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படும் என்று தெரிவித்த இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதற்கிடையில், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில், பீகார் 5ம் இடத்தில் உள்ளது. கடந்த 1 மாதமாக அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி நிலவரப்படி, பீகாரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.22 லட்சமாக அதிகரித்திப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல எனவும் பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும் வரை பீகாரில் பேரவை தேர்தலை நடத்தக்கூடாது என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.