“மாநிலங்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து விட்டால் எவ்வாறு அரசை நடத்துவது?” மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி!!
மாநிலங்களிடம் இருந்த வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு பறித்துக்கொண்டால், மாநிலங்கள் எவ்வாறு ஆட்சி நடத்த முடியும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள எஸ்பிஎஸ் நாகர் மாவட்டத்தில் உள்ள கத்தார் காலன் கிராமத்தில் உள்ள ஷாஹீத் பகத் சிங்கின் 113-வது பிறந்த நாளான இன்று முதல்வர் அமரிந்தர் சிங் மரியாதை செலுத்தினார்.
அதன்பின் அங்கு விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் முதல்வர் அமரிந்தர் சிங், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிருபர்களுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழித்துவிடும். இந்த விவகாரத்தை பஞ்சாப் அரசு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதால், இந்தச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுப்போம். இரு வழக்கறிஞர்கள் டெல்லியிலிருந்து நாளை வருகிறார்கள். அவர்களுடன் சட்ட ஆலோசனை நடத்திவிட்டு, வழக்குத் தொடரப்படும்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியர்கள் யார் சிக்குவார்கள், யாரிடம் துப்பாக்கி கொடுக்கலாம், வெடிகுண்டு கொடுக்கலாம், கையெறி குண்டுகள் வழங்கலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்சினையை அவர்கள் தொடக்கத்திலிருந்து கவனித்து வருகிறார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏறக்குறைய 150 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளோம், 700 ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். ஆதலால், விவசாயிகள் பிரச்சினையில் ஐஎஸ்ஐ தலையிடக்கூடும் என்பதால் யாரும் இலக்காகிவிடக்கூடாது.
மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. இப்போது மாநில அரசிடம் இருந்து வேளாண் துறையையும் பறித்துவிட்டது. எதைத்தான் மாநிலங்களுக்கு விட்டு வைக்கப்போகிறீர்கள்? மாநிலங்களுக்காக எதையாவது விட்டுவைப்பீர்களா அல்லது இல்லையா? மாநிலங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துவிட்டீர்கள் என்றால், எவ்வாறு மாநிலங்கள் அரசை நடத்த முடியும்? புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்குமாறு கோரியுள்ளோம். அவர் பங்கேற்பார் என நம்புகிறோம்”. இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்.