கோவிலுக்கு வந்த இடத்தில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வர்!!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்த பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில், முதல்வர் கையால் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கோயில் வளாகம் அருகே முதல்வர் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பந்தல் அருகே உள்ள பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனை அடுத்து தாமதமாக வந்த முதல்வர் கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
பின்னர் பாறை விழுந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கூறி சென்றார். தற்போது பாறைகள் சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.