மது கிடைக்காத விரக்தி …போதைக்காக சானிடைசரை குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பரிதாப பலி
ஆந்திர மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில் போதைக்காக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரைக் குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பலியானார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அங்கு 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,281 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்சேடு கிராமத்தில் போதைக்காக சானிடைசரைக் குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் இன்று பலியானார்கள்.
இதுகுறித்து பிரகாசம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கவுசால் கூறியதாவது:
“பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்சேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களாக மது குடிக்காத விரக்தியில், கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரைத் தண்ணீரிலும், குளிர்பானத்திலும் கடந்த சில நாட்களாகக் குடித்து வந்துள்ளனர். இதில் இருவர் திடீரென நேற்று இரவு உயிரிழந்தனர்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மற்ற 8 பேர் இன்று காலை முதல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அந்தக் கிராமத்துக்குச் சென்று நேரடியாக விசாரணை நடத்தினேன். அவர்கள் குடித்ததில் ஏதேனும் நச்சுப்பொருள் கலந்திருந்ததா என விசாரித்தேன். அந்தப் பொருட்களை வேதியியல் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். இந்தத் துயரச் சம்பவத்தில் கள்ளச்சாராயத்தை யாரும் குடிக்கவில்லை. இப்பகுதியில் கள்ளச்சாராயம் இல்லை.
உயிரிழந்த 10 பேரும் குடிபோதைக்கு மிகவும் மோசமான அடிமைகள் என்று விசாரணையில் தெரியவருகிறது. மது கிடைக்காத விரக்தியில்தான் இவர்கள் சானிடைசரை வாங்கி அதைக் குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர்.
இந்தக் கிராமத்துக்கு அருகே இருக்கும் கோயில் பகுதியில் தங்கியிருந்த 3 பிச்சைக்காரர்கள் நேற்று இரவு உயிரிழந்திருக்கக்கூடும் எனக் கருதுகிறோம். மற்றொருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்ற 7 பேரும் ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள். இவர்கள் இன்று காலை அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்னர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் சிலரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”.இவ்வாறு கவுசால் தெரிவித்தார்.