“பப்ஜி கேமால்” மனநலம் பாதிக்கப்பட்டு, பின் உயிரையும் இழந்த மாணவன்!!

பப்ஜி கேமால் மனநலம் பாதித்து, சிகிச்சை பெற்று வந்த மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சூலூரை சேர்ந்தவர் கந்தவேல், 46; சென்னை, வண்டலூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இவரின் மகன் அருண், 16; தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். மொபைல் போனில் தொடர்ந்து, ‘பப்ஜி கேம்’ விளையாடியதால், மாணவன் மனநலம் பாதித்தார்.
இதனால் கோவையில் தனியார் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று மாதமாக சிகிச்சை பெற்றார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே, கள்ளிப்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில், மனைவி, மகனுடன் கந்தவேல் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அருண், மீண்டும் பப்ஜி கேம் விளையாட தொடங்கியதால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவன், நேற்று முன்தினம் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்படி, புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.